#

#

#

#

#

#

#

#

#

#

Wednesday, December 26, 2018

1990ல் வாழ்ந்தவர்கள் அனுபவித்த வாழ்கையின் ஒரு தொகுப்பு...

1990ல் வாழ்ந்தவர்கள் அனுபவித்த வாழ்கையின் ஒரு தொகுப்பு...























1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்

📕1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்

1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்.

🏅1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது🏅

💠 காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.

💠 வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.

💠 ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்…

 💠ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை…

 💠பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்…

 💠விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது…

💠 மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்…

💠 உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்…

 💠மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்…

💠 வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்…

💠 அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்…

💠 ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்…

💠 அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது…

💠 ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்…

 💠ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது…

 💠ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது…

💠 உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்…

 💠தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்… அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்…

 💠ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது… அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்…

💠 பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்…

💠 10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்…

💠 யாராவது செல்போன் (சாதாரண 1100) வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்…

💠 நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்…

 💠பணக்கார வீட்டு இளம் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்…

 💠10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது…

 💠போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்…

💠 வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது…

💠 வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்…

💠 ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்…

💠 10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது…

💠 10ல் 8 ஆண்களிடத்தில் வேஷ்டி கட்டும் பழக்கம் இருந்தது…

💠 பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்…

💠 கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது…
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது…
அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது…

💠 பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்…

💠 தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்… பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை…

💠 12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது…
 
💠 இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்…

 உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை… பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை… அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்…

அப்போலோ முதல் அமெரிக்கா வரை... ஒரு பிளேட் இட்லி என்ன விலை?

அப்போலோ முதல் அமெரிக்கா வரை... ஒரு பிளேட் இட்லி என்ன விலை? 
நன்றி : விகடன் 

இந்த பாஸ்வேர்ட் எல்லாம் வேண்டாம்: நிபுணர்கள் எச்சரிக்கை!!!


மொபைல் போன்கள், வங்கிக் கணக்குகள், மின்னஞ்சல் என எங்கும் எதிலும் பாஸ்வேர்டு மயமாகிவிட்ட நிலையில் பாஸ்வேர்டு எளிதில் மறக்கக்கூடாது என்பதற்காக சாதாரணமான வார்த்தைகள் அல்லது எண்களை பாஸ்வேர்டுகளாக வைத்துக் கொள்வது பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 

குறிப்பாக 1,2,3,4,5,6 என்ற 6 இலக்க எண்கள் தான் மிக மோசமான பாஸ்வேர்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாஸ்வேர்டு தான் 2018ஆம் ஆண்டின் மிக மோசமான பாஸ்வேர்டுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் Password  என்ற சொல் அதிகமாக உள்ளது. மின்னஞ்சல்கள், வங்கிக் கணக்குகள், மொபைல் போன்கள் உள்ளிட்டவற்றில் எளிதாக ஊடுருவ முடிந்த 5 லட்சம் பாஸ்வேர்டுகளை ஆராய்ந்ததில் சிறப்பு குறியீடுகளுடன் இயன்ற வரை நீளமானதாக உள்ள பாஸ்வேர்டே மிகவும் பாதுகாப்பானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, December 25, 2018

உங்க வீட்டு மாடி காலியா இருக்கா? நீங்களும் ஆகலாம் 'மினி' விவசாயி!

ன்றைய சூழ்நிலையில் காய்கறிகளின் விலையைக் கேட்டாலே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறோம். அந்த அளவிற்குக் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதிக விலை கொடுத்து வாங்கும் காய்கறிகளும் இயற்கையான காய்கறிகளா... என்ற கேள்விக்கு நிச்சயமாக நம்மிடம் பதில் இருக்காது. இந்த விலை ஏற்றத்திற்கு விவசாயிகளை மட்டும் குறை சொல்லிவிட முடியாது. அப்படி இயற்கையான காய்கறிகளை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டுமெனில் உங்களுக்குச் சிறந்தது, மாடித்தோட்டம் மட்டும்தான்.


"உணவே மருந்து" என நமது முன்னோர்கள் வந்திருக்கிறார்கள். நாம் "மருந்தே உணவு" எனத் தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டு வருகிறோம். மாடித்தோட்டம் முழுமையாகத் தெரியாதவர்கள் கூட பத்து தொட்டிகள் வைத்து ஆரம்பிக்கலாம். முதலில் தொட்டிகளில் நிரப்பும் மண், உரம் போன்ற பொருட்களில் கவனம் செலுத்த வேண்டும். தேங்காய் நார் கட்டி, செம்மண், மாட்டு எரு, மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு என்ற கலவையை கலந்து தொட்டியில் போட வேண்டும். தொட்டியின் அடிப்புறம் நான்கு திசைகளிலும் அதிகப்படி நீர் வெளியேற துவாரங்கள் இட வேண்டும். அதன் பின்னர் 5 நாட்கள் கழித்து, விதையை விதைக்கலாம். ஆனால் கத்திரி, மிளகாய் மற்றும் தக்காளி பயிர்களை நாற்று விட்டு நடவு செய்வது அவசியம். மற்ற காய்கறிப் பயிர்களுக்கு நாற்றுவிடத் தேவையில்லை.

சென்னை பகுதிகளில் அதிகமானோர் பழ மர வகைகளைக் கூட மாடித்தோட்டத்தில் வளர்த்து வருகிறார்கள். பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர்  நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும். மேலும், இஞ்சி, பூண்டு, மிளகாய் மூன்றையும் தண்ணீரில் கலந்து தெளிக்கிறார்கள். சிலர் புளித்த மோரையும் தெளிப்பது உண்டு.  ராசாயன உரங்களுடன் உயிர் உரங்களை கலந்து எப்போதுமே பயன்படுத்தக் கூடாது. மழை காலங்களில் நீர் ஊற்றுவதை தவிர்க்க வேண்டும். வெயில் காலங்களில் இரண்டுமுறை தண்ணீர் தர வேண்டும். கோடைக்காலத்தில் ஏற்படும் செடிவாடலைத் தவிர்க்க குறைந்த செலவில் நிழல்வலைக்குடில் அமைக்க வேண்டும்.

செடிகள் அழுகினால் வேர்ப்பகுதியில் ஏதாவது அழுகல் நோய் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதன்பின்னர் வேப்ப எண்ணெய் கரைசலை சிறிதளவு வேர்ப்பகுதியில் விட வேண்டும். மேலும் வீட்டில் சேரும் காய்கறிக் கழிவுகளை தொட்டியில் நேரடியாக உரமாகப் போடலாம். மாடித்தோட்ட தொட்டிகளைக் கீழே வெறும் தரையில் வைக்கக் கூடாது. பாலித்தீன் ஷீட்டுகளை விரித்து அதன்மேல் வைக்கலாம். இதனால் மாடியில் தண்ணீர் கசிவு ஏற்படும் பயம் இருக்காது. மாடித்தோட்டம் அமைக்க உங்கள் வீட்டு மொட்டை மாடி இடமே போதும். மாடித்தோட்டம் என்பது இயற்கைமுறை காய்கறிகளை மட்டும் நமக்குத் தருவதில்லை. நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவும். இதற்கு என்று தனியாக அதிகமாகச் செலவு செய்யத் தேவையில்ல. ஆர்வம் மட்டும் இருந்தால் போதும். விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகள் அதிகமாக நடக்கும் இடங்களிலும், விதை திருவிழாக்களிலும் விதை வாங்கிக் கொள்ளலாம்.
முன்னர் தமிழ்நாடு அரசே மானிய விலையில் பொருட்களை கொடுத்து வந்தது. இத்திட்டம் இப்போதைக்குச் சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஒருசில இடங்களில் மட்டும் செயல்பட்டு வருகிறது. 1000 ரூபாய்க்கு 685 ரூபாய் மானியம் தரப்படுகிறது. தேவையான அனைத்தையும் மாவட்ட தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். 
மாடித்தோட்டம் அமைக்க ஆடி மாதமே சரியானது. உங்களுடைய வீட்டுக்கு நீங்களே மாடித்தோட்டம் அமைத்தால், நீங்களும் ஒரு 'மினி' விவசாயி.


Friday, December 14, 2018

சிகா கல்வியியல் கல்லூரி - எட்டாவது பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்- (2015-17 ஆண்டு)மாணவர்கள்

 சிகா கல்வியியல் கல்லூரி - எட்டாவது பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்- (2015-17) மாணவர்கள் அனைவரையும்  வருக வருக என வரவேற்கிறோம்..

Friday, December 07, 2018

கரைசேரா கணினி கனவுகள் - கண்ணீர் விடும் கணினி ஆசிரியர்கள்

கரைசேரா கணினி கனவுகள் - கண்ணீர் விடும் கணினி ஆசிரியர்கள். 


நன்றி: புதிய தலைமுறை கல்வி மற்றும் திரு .வேலு

தற்காலிக கணினிஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு..

G.O Ms 770 - தற்காலிக கணினிஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு..





Tuesday, December 04, 2018

"நான்தான் உனக்குப் புள்ள...மாசம் ரூ.2,500 அனுப்புறேன்!"- தவித்த மூதாட்டியைத் தத்தெடுத்து, நெகிழ வைத்த அரசுப் பள்ளி ஆசிரியர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட,  ஐந்து  பிள்ளைகளால் கைவிடப்பட்டு தனித்து வாழ்ந்த மூதாட்டியைத் தனது தாயாகத் தத்தெடுத்து, நெகிழ வைத்திருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகில் உள்ள பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர், பூபதி. 13 லட்சம் வரை ஸ்பான்ஸர் பிடித்து, தான் பணிபுரியும் அரசுப் பள்ளியைத் தனியார் பள்ளிகளைவிட அதிக வசதிகளைக் கொண்ட பள்ளியாக மாற்றியிருக்கிறார். 

இவரது செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, இவரின் நண்பரானவர் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்துள்ள மருதவனம் கிராமத்தில் ஆசிரியையாகப் பணிபுரியும் அமுதா. சமீபத்தில் இந்தப் பகுதியை கஜா புயல் சிதைத்துப்போட, புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நினைத்திருக்கிறார் பூபதி.

அமுதாவிடம் பேசி, 'புயலால் பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் என்னால் உதவ முடியாது. யாராவது முதியவர் பாதிக்கப்பட்டிருந்தால் சொல்லுங்கள், அவருக்கு நிரந்தரமாக உதவுவோம்' என்று சொல்லியிருக்கிறார். அதன்படி, ஆசிரியை அமுதா மருதவனத்தில் தான் பெற்ற ஐந்து பிள்ளைகளால் கைவிடப்பட்டுத் தனித்து வாழ்ந்த பாக்கியம் பாட்டியைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். 


அவர் வசித்துவந்த ஒட்டுக் குடிசையையும் பழைய பாத்திரங்களையும், பழைய நைய்ந்த சேலைகளையும் கஜா புயல் சிதைத்துப் போட, பக்கத்து வீட்டில் தற்காலிகமாக வசித்துவந்திருக்கிறார். அவரது கதையைக் கேட்டு இதயம் கசிந்த பூபதியும், அவரது ஆசிரியை மனைவியான பிருந்தாவும், மளிகை சாமான்கள், 50 புடவைகள், சமையல் செய்யப் பயன்படுத்தும் சாமான்கள் சகிதமாகப் போய் இறங்கி இருக்கிறார். பாக்கியம் பாட்டி கையைப் பிடித்து,'என்னை மகனா நினைத்துக்கொண்டு இத வச்சிக்க.' என்று சொல்ல, கரகரவென கண்ணீர் சிந்தியிருக்கிறார்.
'கொள்ளு விரையாட்டம் அஞ்சு பிள்ளைகளைப் பெத்தேன். ஆனா, ஆளானதும் என்னை அம்போன்னு தவிக்கவிட்டுட்டு, தனியா போய்ட்டாங்க. என்னை சீந்தக்கூட நாதியில்லை. மாட்டுக்கொட்டகையைவிட கேவலமான குடிசையில் உசுரக் கையில புடிச்சுக்கிட்டு வாழ்ந்துகிட்டிருக்கேன். 75 வயசாயிட்டு. 

முன்னமாதிரி பொழப்புதழப்புக்கும் போக முடியலை. அரசாங்கம் தர்ற 1000 ரூபா முதியோர் உதவித்தொகையில சீவனம் நடந்துச்சு. இலவச ரேஷன் அரிசி வாங்கி திங்கக்கூட வழியில்லாம ரேஷன் கார்டைகூட பாவி புள்ளைங்க தூக்கிட்டுப் போயிட்டுங்க. இந்த நிலையில புயல் வந்து, என்னோட வீட்டையும், சாமான்களையும் சேதம் பண்ணிட்டு. வாழ்க்கையே இருண்டுகிடக்கு தம்பி' என்று நெக்குருகிச் சொல்லியிருக்கிறார்.
அதைக் கேட்டு கண் கலங்கிய பூபதி, "உன்னை என் தாயா தத்தெடுத்துட்டேன். உன் கடைசி காலம் வரைக்கும் நான்தான் உனக்குப் புள்ள. குடிசைபோட எவ்வளவு செலவாகும்' என்று கேட்டிருக்கிறார். 'ஐயாயிரம் வரை செலவாகும்' என்று சொல்லியிருக்கிறார். 'அதை அமைச்சுத் தர்றேன்' என்றதோடு, கையில் இரண்டாயிரம் பணத்தைக் கொடுத்துவிட்டு, "உன் கடைசி காலம் வரை உனக்கு மாசாமாசம் 2,500 ரூபாய் அனுப்புகிறேன்" என்று சொல்ல, உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகள் வராமல் பாக்கியம் பாட்டி நா தழுதழுத்திருக்கிறார்.

பூபதியிடமே பேசினோம். "அந்த அம்மாவின் கதையைக் கேட்டதும் மனசு நொறுங்கிப் போயிடுச்சு. கஜா புயலில் மருதவனம் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. ஆனா, தனது அம்மா கதி என்னன்னு ஒரு பிள்ளையும் வந்து அவரை பார்க்கலை. அது புயல் செய்த கொடுமையைவிட அவலம். அதனால், நானும் என் மனைவியும் அந்த மூதாட்டியைத் தாயாகத் தத்தெடுப்பதுனு முடிவுபண்ணி மாசாமாசம் 2,500 ரூபாய் அனுப்புறதா சொல்லியிருக்கிறோம். 
அதோட, மாசம் ஒரு தடவை போய் அவரைப் பார்த்து, அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்றதா இருக்கோம்.  அவருக்குப் புயல் பாதித்த அல்லலைவிட, தன் பிள்ளைகள் தன்னை வந்து பார்க்கலையேங்கிற மனக்குமுறல்தான் அதிகம். அந்தக் குறையை நானும் என் மனைவியும் ஆசிரியை அமுதா உதவியோடு போக்கியிருக்கிறோம்" என்றார் அழுத்தமாக.

 நன்றி

திறந்தநிலை பல்கலை.யில் பிஎச்.டி.: விண்ணப்பிக்க டிச. 29 கடைசி

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளின் கீழ் பிஎச்.டி. படிப்பை மேற்கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 29 கடைசி நாளாகும்.

இதுதொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு:

பல்கலைக்கழகத்தில் யுஜிசி அனுமதியுடன் தமிழ், ஆங்கிலம், மேலாண்மையியல், கல்வியியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், குற்றவியல், மின்னணு ஊடகவியல், புவியியல், கணினி அறிவியல், பண்டைய வரலாறு மற்றும் தொல்பொருளியல் ஆகிய துறைகளின் கீழ் பிஎச்.டி. படிப்புகள் வழங்கப்படுகின்றன.

யுஜிசி-யின் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகையைப் பெற தகுதியுடைய மாணவர்கள், உதவித் தொகையுடன் இந்த ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ள முடியும். 

இதற்கான விண்ணப்பத்தை பல்கலைக்கழகத்தின் www.tnou.ac.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 29 கடைசி நாளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, November 25, 2018

அன்பாசிரியர் - செங்குட்டுவன்- இந்தியா முழுக்க சொந்த செலவில் மாணவர்களை போட்டிகளுக்கு அழைத்துச்செல்லும் ஆசிரியர்!

11 முறை 5 மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து விருது, 13 விஞ்ஞானிகளிடம் விருது, பாராட்டு, 5 அமைச்சர்களிடம் இருந்து விருது இவையனைத்தும் அன்பாசிரியர் செங்குட்டுவனுக்குக் கிடைத்தவை அல்ல. தன் மாணவர்கள் இந்த விருதுகளைப் பெற தனியொருவராக இருந்து தகுதிப்படுத்தியவர் அவர்.
''சிறுவனாக இருந்தபோது தினமும் காலையில் 8 கி.மீ. நடந்து பள்ளிக்குச் செல்வேன் , மாலையில் மீண்டும் 8 கி.மீ. நடக்க வேண்டும். அறிவியலில் அதீத ஆர்வம் கொண்டிருந்த எனக்கு, ஒருமுறை அறிவியல் கண்காட்சிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் 15 ரூபாய் இல்லாத காரணத்தால் அதற்குச் செல்ல முடியவில்லை. அந்த ஏக்கமும் வலியும்தான் இன்று இந்தியா முழுக்க என்னுடைய சொந்த செலவில் ஏராளமான மாணவர்களை அறிவியல் கண்காட்சிகளுக்கு அழைத்துச் செல்ல உந்துகிறது என்கிறார்'' செங்குட்டுவன்.
''எனக்குக் கிடைக்காமல் போனது, ஒருபோதும் என் மாணவர்களுக்குக் கிடைக்காமல் போகக் கூடாது'' என்னும் அன்பாசிரியர் செங்குட்டுவன், கடந்த 8 ஆண்டுகளில் ஒரு நாள் கூட பள்ளிக்கு விடுமுறை எடுத்ததே இல்லை. காலம் தவறாமையைப் பின்பற்றும் அவர், பெரும்பாலான சனி, ஞாயிறுகளில் பள்ளிகளில் மாணவர்களுடன் செலவழிப்பதாய்ச் சொல்கிறார். ''விடுமுறை எடுக்காமல் சென்றதில் பெருமை இல்லை, அதைக் கொண்டு மாணவர்களைச் சாதனையாளர்கள் ஆக்கியதில்தான் பெருமை'' என்கிறார்.
தனது நெடும் பயணத்தை அவரே விவரிக்கிறார்...
''2005-ல் அரசுப் பணி கிடைத்து, அரியலூர் மாவட்டம், தேவாமங்கலம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் ஆனேன். சில நாட்களிலேயே அங்கிருந்த மாணவர்களை அறிவியல் புத்தாக்கக் கண்காட்சிக்காக அரியலூர் அழைத்துச் சென்றேன். முறையாக பயிற்சி எடுத்து, நாங்களே உருவாக்கிய அறிவியல் உபகரணங்களோடு போட்டியில் பங்கெடுக்கத் தயாரானோம்.
முதல் வெற்றி
பேருந்தில் பயணித்ததால் குழுவில் இருந்த மாணவனுக்கு தலைசுற்றல், வாந்தி ஏற்பட்டது. பள்ளிக்குச் சென்றுவிட்டதால் மாற்று உடை வாங்க முடியவில்லை. அங்கேயே அதைத் துவைத்துக் காயவைத்தேன். மாணவனுக்கு ஆறுதல் சொல்லிப் போட்டியில் பங்கேற்க வைத்தேன். அன்று அறிவியல் போட்டியில் அந்த மாணவனுக்கு மாவட்டத்தில் முதலிடம் கிடைத்தது. அதுதான் எங்களின் முதல் வெற்றி.
அடுத்த முறை மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்தோம். அதற்கடுத்த தடவை 2013-ல் மாநிலத்தில் முதல் பரிசு பெற்று, தங்கப் பதக்கத்தைப் பெற்றோம். தேசிய அளவிலான போட்டியில் மொழிப் பிரச்சினை ஏற்பட்டாலும் சிறப்புப் பரிசு கிடைத்தது. 2014-ல் மத்திய அரசு நடத்திய தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்ட 5 மாணவர்கள் 'இளம் விஞ்ஞானி' விருது பெற்றனர். ‘ரேஷன் கடைகளில் கம்பு, சோளம் உள்ளிட்ட சிறு தானியங்களை விநியோகித்து, மக்களின் சர்க்கரை, ரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்’ என்ற செயல் திட்டத்துக்கு அந்த விருது கிடைத்தது.
அனைத்துப் போட்டிகளிலும் மாணவர்கள்
அனைத்துப் போட்டிகளிலும் மாணவர்களைப் பங்குபெறச் செய்ய வேண்டும் என்பது என்னுடைய இலக்கு. இதற்காகவே நன்றாகப் பேசும் மாணவனை பேச்சுப் போட்டியிலும் கையெழுத்து சிறப்பாக இருப்பவர்களைக் கட்டுரைப் போட்டியிலும் பங்குகொள்ள உத்வேகமூட்டுவேன். அதேபோல ஓவியம், பாட்டு, விளையாட்டு, யோகா என அனைத்துப் போட்டிகளிலும் எங்கள் மாணவர்கள் பங்கேற்பர்.
இதற்கான முன் தயாரிப்புகளுக்கு சனி, ஞாயிறுகளைப் பயன்படுத்திக் கொள்கிறேன். மாணவர்களும் முகம் சுளிக்காமல் பள்ளிக்கு வருகின்றனர். போட்டிகளில் பங்கெடுப்பதாலேயே பரிசு பெற வேண்டும் என்று மாணவர்களிடம் சொல்வதில்லை. அதே நேரம் எங்களின் கடுமையான பயிற்சி மற்றும் முயற்சியால் அவர்கள் பரிசு வாங்காமல் திரும்பியதில்லை.
மாவட்ட அளவிலான போட்டிகள், மாநிலப் போட்டிகளுக்கு என்னுடைய சொந்த செலவிலேயே மாணவர்களை அழைத்துச் சென்றுவிடுவேன். தேசிய அளவில் தேர்வாகும்போது பெரும்பாலும் உதவித்தொகை கிடைத்துவிடும். இல்லாதபட்சத்தில் நானே செலவழித்துவிடுவேன், பணத்தால் மாணவர்களின் முயற்சி தடைபட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
சொந்த செலவில் அறிவியல் ஆய்வகம், மூலிகைத் தோட்டம்
பள்ளியில் என்னுடைய சொந்த செலவில் ரூ.50 ஆயிரம் மதிப்பில் அறிவியல் ஆய்வகம் அமைத்தேன். ஆசிரியப் பணிக்கு முன்னால் மெக்கானிக்காக இருந்ததால், பள்ளிக்கான வயரிங் வேலையை நானே செய்துவிடுகிறேன். மாணவர்களுக்கு விவசாயத்தில் ஆர்வத்தை உருவாக்க மூலிகைத் தோட்டம் உருவாக்கினோம். ரூ.16 ஆயிரம் செலவு செய்து, நானே குழிதோண்டி, காய்கறிச் செடிகள், கீரைகள், மூலிகைகள் ஆகியவற்றைப் பயிரிட்டேன்.
தொடர் முயற்சிகளால் ஆங்கிலத்தில் பெயரை எழுதக்கூட சிரமப்பட்ட மாணவர்கள் பலர், இன்று அறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்கிறார்கள். அவர்களை மற்ற பள்ளிகள் தத்தெடுத்துக் கொள்கின்றன. என்னிடம் படித்த மாணவர் கதிரவன் இப்போது எம்பிபிஎஸ் படிப்பை முடித்துவிட்டார். ஏராளமானோர் இளங்கலை, முதுகலைப் படிப்பை முடித்துப் பணியில் இருக்கின்றனர். மெல்ல மெல்ல தேவாமங்கலம் பள்ளி தலைசிறந்த பள்ளியாக உருமாறியது.
இப்போது அங்கிருந்து ஜெயங்கொண்டம், புதுச்சாவடி பள்ளிக்கு கேட்டு வாங்கி மாறுதல் பெற்றுள்ளேன். இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் கம்பளத்தார் (குடுகுடுப்பைக்காரர்கள்) சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நாடோடிகளாக இருப்பதால் அவர்களின் குழந்தைகள் முறையாகப் பள்ளிக்கு வருவதில்லை. பெண்களையும் படிக்க வைப்பதில்லை. இதை மாற்ற எண்ணி செயலாற்றி வருகிறேன். அதன் ஒருபகுதியாக பள்ளிக்கு மாற்றலான ஒரே மாதத்தில் மாணவர்கள் சிலரை லக்னோவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றேன். கண்காட்சி முடிந்த பிறகு குடியரசுத் தலைவரைச் சந்தித்துப் பேசினோம்.
88 ஆண்டு வரலாற்றில்...
அச்செய்தி பல்வேறு நாளிதழ்களில் வந்தது. பள்ளியின் 88 ஆண்டுகால வரலாற்றில், இதுதான் செய்தித்தாள்களில் வருவது முதல்முறை என்று பொது மக்கள் நெகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து பள்ளிக்காக 5 மின்விசிறிகள், 5 லைட்டுகளை அளித்தனர்.
அதேபோல லக்னோ சென்றுவந்த கம்பளத்தார் சமூக மாணவன் ஒருவனை, அவனின் குடும்பத்தைச் சேர்ந்த 30 பேர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இப்போது என் மேல் பொதுமக்களுக்கு நம்பிக்கை துளிர்த்திருக்கிறது. அதைக் கொண்டு அங்குள்ள மாணவிகளை முதல் தலைமுறைப் பட்டதாரிகளாக்க வேண்டும். சிதிலமடைந்து கிடக்கும் பள்ளிக் கட்டிடங்களைப் புதுப்பிக்க வேண்டும். தண்ணீர் இல்லாமல், அதே நேரம் மழை வந்தால் ஒழுகும் கழிப்பறைகளைச் சீர்படுத்த வேண்டும்.
வரமான குடும்பம்
''இன்னும் வாடகை வீட்லதான் இருக்கார்; இவருக்கு பென்ஷன் கூடக் கிடையாது. இப்படி வேலை செய்றதால இவருக்கு சிலையா வைக்கப் போறாங்க?'' என்று சக ஆசிரியர்களின் கேலிக்கு உள்ளாகி இருக்கிறேன். என் மனைவியும் ஆசிரியர் என்பதால் என்னுடைய மனநிலையைப் புரிந்துகொள்கிறார். என் பிள்ளைகள் அவர்களாகவே படித்துக் கொள்கிறார்கள். என் குடும்பம் எனது வரம்.
என் மாணவர்கள்தான் என்னுடைய முதலாளி, எஜமானர், நீதிபதி எல்லாமே. எக்காரணத்தை முன்னிட்டும் என் மாணவர்களுக்குத் தேவையான வசதிகள் கிடைக்காமல் போய்விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்'' தீர்க்கமாய்ச் சொல்கிறார் அன்பாசிரியர் செங்குட்டுவன்.
அன்பாசிரியர் செங்குட்டுவனின் தொடர்பு எண்: 8248474808
Courtesy: The Isai Tamil Hindu

Thursday, November 22, 2018

1,398 விவசாயிகளின் ரூ.4 கோடி வேளாண் கடனை செலுத்திய அமிதாப் பச்சன்

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரத்து 398 விவசாயிகளின் வேளாண் கடன் ரூ.4.05 கோடியை வங்கியில் திருப்பிச் செலுத்தியுள்ளதாக இந்தி நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட வறட்சியால் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து வந்தனர். அதில் 350 விவசாயிகளின் கடனை வங்கியில் செலுத்தி அவர்களைத் தற்கொலையில் இருந்து நடிகர் அமிதாப் பச்சன் காத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 1,398 விவசாயிகளின் வங்கிக் கடனையும் அடைத்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
''உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 1,398 விவசாயிகள் வங்கியில் வாங்கியிருந்த வேளாண் கடனை நான் திருப்பிச் செலுத்தியுள்ளேன். இந்தக் கடன் தொகையின் மதிப்பு ரூ.4.05 கோடியாகும். அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட 70 விவசாயிகளை மும்பைக்கு அழைத்து வந்து என்னைச் சந்திக்கச் செய்து உதவினேன்.
வறுமையில் வாடும் விவசாயிகளை மீட்கவும், அவர்களின் சுமையைக் குறைக்கவும் என்னால் முடிந்த உதவிகளைத் தொடர்ந்து செய்வேன். முதலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 350 விவசாயிகள் கடன் அடைக்கப்பட்டது. இப்போது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1,398 விவசாயிகள் கடன் நிலுவைத் தொகை அடைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் மனதில் அமைதியும் ஏற்படும். விருப்பமும் நிறைவடையும்''.
இவ்வாறு நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

Courtesy:  Hindu Tamil Isai

Sunday, November 18, 2018

நெஞ்சு சளியால் அவஸ்தையா? இதோ உங்களுக்கான இயற்கை வைத்தியங்கள்

நெஞ்சு பகுதியில் தங்கியுள்ள சளியை குணப்படுத்த சில கை வைத்தியங்கள் பின்பற்றினாலே விரைவில் குணப்படுத்த முடியும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் சூடு செய்து அதில் சிறிது கற்பூரம் சேர்த்து அந்த எண்ணையை தினமும் நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும்.


எலுமிச்சை சாறு மற்றும் தேன்
ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் வெந்தய விதைகளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால் தொண்டைப் புண் வரவிடாமல் தடுக்கும்.

துளசி சாறு

வறட்டு இருமல் இருப்பவர்கள் சுக்கு, மிளகு சேர்த்த வெந்நீர் குடித்தால் நல்லது. துளசி மிகச்சிறந்த மூலிகையாகும், துளசி சாற்றுடன், சரிசம அளவில் வெங்காயச் சாறு சேர்த்து பருகி வந்தால் இதமாக இருக்கும்.


பாலில் மிளகுத் தூள்

இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில் மிளகுத் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இவற்றுடன் சீரகம் கலந்து உண்டால் சளி எட்டி கூட பார்க்காது.

இஞ்சி சாறு

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு மற்றும் வெங்காய சாறு ஆகியவற்றை சரிசம அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.


கேரட் சாறு

உடல் பொலிவிற்கு வலிமை சேர்க்கும் கேரட் சாறு சளியை எதிர்க்கவும் நல்லது, இந்த ஜூஸை சளி பிடித்திருக்கும் போது குடித்தால், விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

Thursday, November 15, 2018

புயல் கனமழை வெள்ளம் - விழிப்புணர்வு காணொலி*

புயல் கனமழை வெள்ளம் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன விழிப்புணர்வு காணொலி*

Tuesday, November 13, 2018

சிகா கல்வியியல் கல்லூரி - கப்பியாம்புலியூர் கிராமம்- டெங்கு விழிப்புணர்வு பேரணி!!!

நவம்பர்-13-2018 இன்று சிகா கல்வியியல் கல்லூரி ஆசிரிய பயிற்சி மாணவ, மாணவிகள் கப்பியாம்புலியூர் கிராமத்தில்- டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.




அன்னபூர்ணா- வகுப்பறையை மேம்படுத்த நகைகளை அடகு வைத்த அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை!

கடைசி வரை கற்றுக்கொண்டே இருப்பவர் - ஆசிரியர்
'மாணவர்களுக்காக என் நகைகளை அடகு வைத்து, ரூ.1.75 லட்சம் செலவில் வகுப்பறையை மேம்படுத்தியது பெரிதில்லை. அவர்களுக்கு உயர்தர ஆங்கிலம் கற்பித்து தன்னம்பிக்கை மிக்க மாணவர்களாய் மாற்றுவதையே பெருமையாய் நினைக்கிறேன்' என்கிறார் இந்த அத்தியாய அன்பாசிரியர் அன்னபூர்ணா.
''விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கந்தாடு அரசு தொடக்கப்பள்ளியில் முதல் பணி கிடைத்தது. அங்கே ஒழுங்காய்த் தலை வாராமல், மூக்கொழுக, அழுது கொண்டிருந்த மாணவர்களைப் பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது. பணியை விட்டுவிடலாம் என்று நினைத்து, பகுதி நேரத்தில் பிசிஏ மற்றும் எம்பிஏ முடித்தேன். அந்த 5 வருடங்களில் மாணவர்கள் என்னை நெருங்கி வந்தாலும், நான் ஒதுங்கிப் போனேன். மெல்ல மெல்ல எனக்கும் அவர்களைப் பிடிக்க ஆரம்பித்தது.
ஆசிரியராகவே தொடர முடிவு செய்து, முதுகலை ஆங்கிலம் முடித்தேன். மாணவர்களுக்கு ஏபிசிடியை மட்டுமே சொல்லிக் கொடுப்பது ஒரு கட்டத்தில் போரடித்தது. நான் படித்த ஆங்கிலமும் மறக்க ஆரம்பித்தது. அதனால் பள்ளியில் ஆங்கிலத்தில் உரையாட முடிவு செய்தேன். காலை முதல் மாலை வரை மாணவர்களுடன் ஆங்கிலத்தில் மட்டுமே பேசினேன்.
ஆரம்பத்தில் தயங்கிய மாணவர்கள், சிறிது நாட்களில் தடுமாறியவாறு பேசத் தொடங்கினர். நாட்கள் செல்லச்செல்ல தன்னம்பிக்கையுடன் சரியான உச்சரிப்போடு பேச ஆரம்பித்தனர். ஆங்கில வழிக்கல்வியில் படிப்பதால் அனைத்துப் பாடங்களையும் அவர்கள் எளிதில் புரிந்துகொண்டனர்.
உச்சரிப்பு முறை கற்பித்தல்
அரசு அளித்த ஆங்கில உச்சரிப்பு பயிற்சியை முறையாகப் பயன்படுத்திக் கொண்டேன். உச்சரிப்பு முறையிலேயே (Phonetics) அனைத்துப் பாடங்களையும் கற்பித்தேன். எங்கள் பள்ளி ஒன்றிய மேற்பார்வையாளர் உச்சரிப்பு முறைக் கற்பித்தலைத் தொகுத்து சிடியாக வெளியிடச் சொன்னார். அதில் சொல்லுக்கான ஒலிபெயர்ப்பு (Transcription), தமிழ் அர்த்தம், சொல்லின் வகை, உச்சரிப்பு ஆகியவை இருக்கும்.
8 ஆசிரியர்கள் இணைந்து முதல் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தின் அனைத்துச் சொற்களையும் எடுத்துக் கொண்டோம். அவற்றில் இருந்து தொகுப்பு ஒன்றைத் தயாரித்து முதல் பருவத்தை வெளியிட்டோம். இரண்டாம் மற்றும் மூன்றாம் பருவங்களுக்கான சொற்களை நானே தயாரித்தேன். சுமார் 10,000 சொற்கள் மற்றும் அதற்கான விளக்கங்கள் கொண்ட தொகுப்பை சிடியாக வெளியிட்டோம். ஆர்வம் கொண்ட பள்ளிகளுக்கு அதை இலவசமாக வழங்கிவருகிறேன்.
தொடுதிரையில் உச்சரிப்பு முறையில் கற்பிக்கும் அன்பாசிரியர் அன்னபூர்ணா
என்னுடைய உதவி இல்லாமலே மாணவர்கள் படிக்கவேண்டும். அதனால் என்னுடைய மடிக்கணினியில் ஆக்ஸ்ஃபோர்டு அகராதி செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளேன். அத்துடன் 4 டேப்லட்டுகளையும் சொந்த செலவில் மாணவர்களுக்காக வாங்கியுள்ளேன். அவற்றின் உதவியோடு புதிய வார்த்தைகளை மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர்.
அசத்தும் அபாகஸ் கற்றல்
ஆர்வத்தின் காரணமாக ரூ.2.50 லட்சம் செலவில் அபாகஸ் படித்தேன். நானே அபாகஸ் உபகரணங்களை வாங்கி மாணவர்களுக்கு இலவசமாகக் கற்றுத் தருகிறேன். இதன் மூலம் 100 கணக்குகளை என் மாணவர்கள் 5 நிமிடத்தில் போட்டுவிடுவார்கள். கணினி, டேப்லட்டுகள், அபாகஸ் உபகரணங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கப் பள்ளியில் இடம் இல்லை.
அதனால் தினமும் அவற்றை பள்ளிக்கு கொண்டுவந்து, வீட்டுக்கு எடுத்துச் செல்கிறேன். பள்ளிக்கு தினமும் 4 பைகளைச் சுமந்துவரும் என்னைப் பலரும் விசித்திரமாகப் பார்த்திருக்கின்றனர்'' என்று சிரிக்கிறார் அன்னபூர்ணா.
அரசுப் பள்ளியொன்றின் 3-ம் வகுப்பு அறை அது. பன்னாட்டுப் பள்ளியொன்றின் வகுப்புக்குள் நுழைந்தது போல, அத்தனை வசதிகளோடு வண்ணமயமாகக் காட்சியளிக்கிறது. கொடையாளர்களின் உதவியோடு இவற்றைக் கட்டவில்லை. என்ன செய்தார் அன்னபூர்ணா? அவரே சொல்கிறார்.
ஆங்கிலப் பாடங்களைப் படிப்பதோடு நிறுத்தாமல், அவற்றைக் கருவாக வைத்து மாணவர்களைக் கொண்டு நாடகம் போட்டோம். அதையும், மாணவர்களின் ஆங்கில உச்சரிப்புகளையும் ஃபேஸ்புக்கில் வீடியோ பதிவாக இட்டேன். யாரென்றே தெரியாத நண்பர்கள், அதைக் கண்டு மாணவர்களுக்கு உதவினர். அப்போதுதான் அவர்களே நம் மாணவர்களுக்கு உதவும்போது, நாம் ஏன் உதவக்கூடாது என்று தோன்றியது.
முதலில் நம் வகுப்பறையை மாற்றத் திட்டமிட்டேன். யாரையும் சிரமப்படுத்தக் கூடாது என்பது என்னுடைய கொள்கை. அதனால் நானே அதைச் செய்ய முடிவுசெய்து, செயல்படுத்தினேன். கையில் அவ்வளவு பணம் இல்லாததால், நகையை அடகு வைத்துப் பணம் புரட்டினேன். கிடைத்த ரூ.1.75 லட்சத்தைக் கொண்டு வகுப்பறைக்குத் தரமான மேசை, நாற்காலிகள், ஸ்மார்ட் வகுப்பறை, தொடுதிரை, மின்விசிறி, தரை ஓவியங்கள் அமைத்தேன்.
தன் சொந்த செலவில் அன்னபூர்ணா அமைத்த வகுப்பறை
பெரும்பாலான மாணவர்களின் கண்கள் கலங்கியிருந்தன. சில மாணவிகள் ஓடிவந்து அம்மா எனக் கட்டிக்கொண்டார்கள். எத்தனை நெகிழ்வான தருணம் அது? அதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. அதன்பின்னர் இன்னும் அதிகம் அவர்களுக்காகச் செய்ய வேண்டும் என்று தோன்றியது.ஒன்றில் மட்டும் உறுதியாக இருக்கிறேன். மாணவர்களுக்காக நாம் எடுக்கும் முயற்சியை, அடையும் துன்பங்களை அவர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். அப்பாவின் 88-வது பிறந்தநாளுக்காக அம்மாவுக்கு ஒரு தோடு வாங்கினோம். அடகு வைக்கும்போது அதையும் சேர்த்தே வைத்தேன். மாணவர்களிடம் 'அப்பா இப்போது உயிருடன் இல்லை என்றாலும் உங்களுக்காக அதைச் செய்தேன்' என்று கூறினேன்.
எதிர்காலத் திட்டங்கள்
எங்கள் வகுப்பறை போலவே பள்ளியின் மற்ற வகுப்பறைகளையும் மாற்றவேண்டும். நேற்று கூட பள்ளிக்குள் பெரிய பாம்பொன்று புகுந்துவிட்டது. மாணவர்களின் பாதுகாப்புக்காக சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் தரமான சீருடைகளை வழங்கவேண்டும். நம்மையே நாம் ஒருமுறை நிரூபித்துவிட்டால், நிச்சயம் மக்கள் உதவுவார்கள் என்பது என் நம்பிக்கை.
சில ஆசைகளும் இருக்கின்றன. அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் செல்லும் என் மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்கவேண்டும். ஆங்கிலத்தின் முக்கியத்தையும், தேவையையும் உணர்ந்து தமிழக அரசு, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உச்சரிப்பு முறைக் கற்றல், கற்பித்தலை அறிமுகப்படுத்த வேண்டும். ஆங்கிலம் என்ற மொழியின் மீதான பயம் முற்றிலுமாக ஒழிய வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும். இவையனைத்தும் நிறைவேறும்பட்சத்தில் ஆசிரியப் பணிக்கான என் நோக்கம் நிறைவேறும்'' என்கிறார் அன்பாசிரியர் அன்னபூர்ணா.
அன்பாசிரியர் அன்னபூர்ணாவின் தொடர்பு எண்: 9994219325
Courtesy:-