Wednesday, September 14, 2016

விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும் புதிய திட்டம் அதிகாரி தகவல்.

விண்ணப்பித்த 4 நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரி தெரிவித்தார். சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரியாக இருந்த கே.பாலமுருகன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்த 4 நாட்களிலேயே பாஸ்போர்ட் கிடைக்கும் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, பான் கார்டு ஆகிய மூன்று ஆவணங்களுடன் நோட்டரி பப்ளிக்கின் கையெழுத்துடன் உள்ள படிவத்தை இணைத்திருந்தால் நான்கு நாட்களில் பாஸ்போர்ட் கிடைக்கும். பாஸ்போர்ட் கிடைக்கப்பெற்றவுடன் காவல்துறையின் சான்றாய்வு மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் சென்னை மண்டலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தட்கல் எனப்படும் துரித பாஸ்போர்ட் திட்டத்தில் இருந்து இது முற்றிலும் மாறானது. மொபைல் போலீஸ் ஆப் பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு விரைவாக காவல்துறை சான்றாய்வு பெற ஏதுவாக மொபைல் போலீஸ் ஆப் என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டால் தினமும் பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்தோர் பற்றிய விவரம் அனைத்தும் அந்தந்த போலீஸ் நிலையத்திற்கு உடனடியாக தெரியும். எனவே அவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் இப்போது நடைமுறையில் உள்ளதை விட விரைவாக விசாரணை நடத்துவார்கள். இந்த திட்டம் இந்தியாவில் மூன்று மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இப்போது தமிழகத்தில் அறிமுகம் செய்ய மாநில அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த ஒப்புதலை வழங்கிய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தலைமை செயலர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். சென்னை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 230 போலீஸ் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படும். இ-சேவை மையங்கள் தமிழ்நாட்டில் உள்ள 280 இ-சேவை மையங்களில் இணைய வழி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி அமல்படுத்தப்பட்டு இருக்கிறது கிராமப்புறங்களில் வாழும் மக்கள் எளிதில் பாஸ்போர்ட் பெறுவதற்கு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பொதுமக்கள் 155 ரூபாய் செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம் 4 லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை மூன்று லட்சத்து மூன்றாயிரம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. விண்ணப்பங்களை சரிபார்ப்பதற்கான கால அளவு 19 நாட்களில் இருந்து 2 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் அளித்த மறுநாளே விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிப்பார்ப்பதற்கு அழைக்கப்படுவார்கள். இவ்வாறு கே.பாலமுருகன் தெரிவித்தார். பேட்டியின்போது புதிய பாஸ்போர்ட் அதிகாரி பி.கே.அஷோக் பாபு, பத்திரிகை தகவல் மைய கூடுதல் டைரக்டர் ஜெனரல் கே.முத்துக்குமார் ஆகியோர் அருகில் இருந்தனர்.
Courtesy: Kalvisolai

0 comments:

Post a Comment