Sunday, November 27, 2016

மின்னணு பணப் பரிவர்த்தனைக்கு மாற பிரதமர் மோடி வேண்டுகோள்

மின்னணு பணப்பரிமாற்ற வசதியை பயன்படுத்த ஒவ்வொரு இந்தியரும் உறுதி எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுகிழமையன்று மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ரேடியோ மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று நடைபெற்ற மன் கீ பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர், மின்னணு பணப்பரிமாற்ற வசதியை பயன்படுத்த ஒவ்வொரு இந்தியரும் உறுதி எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்ற சிலர் ஏழைகளைப் பயன்படுத்துவதாக கூறியுள்ள மோடி அவர்கள் வாழ்க்கையில் விளையாட வேண்டாம் என்றும் கே‌ட்டுக்கொண்டார். ஏழை மக்களும் தற்போது ரூபே ஏடிஎம் அட்டைகளை பயன்படுத்தத் தொடங்கியிருப்பதாகவும் அதன் பயன்பாடு‌ 3 மடங்கு அதிகரித்திருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
ஏழைகள், விவசாயிகள், நலிவடைந்தவர்கள் நலன் கருதியே 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கும் முடிவை எடுத்ததாகவும் பிரதமர் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் மக்களின் சிரமங்களை ‌உணர்ந்திருப்பதாகவும் ஆனால் கறுப்புப் பணம் என்ற வியாதி கடந்த 70 ஆண்டுகளாக நாட்டை பீடித்‌திருப்பதாகவும் அதை குணப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என்றும் பிரதமர் குறிப்பிட்டார். ரூபாய் பிரச்னைகள் சரியாக 50 நாட்களாகும் என தான் ஏற்கனவே கூறியிருந்ததாகவும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
சிறு வியாபாரிகள் மின்னணு முறை பணப் பரிமாற்றத்துக்கு மாற இதுவே சரியான நேரம் என்றும் இது நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் பேசினார். தொழிலாளர்கள் அனைவரும் வங்கிக் கணக்கைத் தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இதன் மூலம் தொழிலாளர்கள் அவர்களுக்குரிய ஊதியத்தை பெற முடியும் என்றும் தெரிவித்தார்.
Courtesy: 

0 comments:

Post a Comment