வாழ்க்கை முழுவதும் குழந்தைப்பருவத்திலிருந்து பள்ளிக்கூடப்பருவம், சினிமா, அரசியல் என்று எல்லாக் காலக்கட்டங்களிலும் பல்வேறு போராட்டங்களை சந்தித்து, எல்லா போராட்டங்களிலும் ‘வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்’ என்று பரணி பாடிய ஜெயலலிதா, கடந்த 75 நாட்களாக முதன்முறையாக மரணப்போராட்டத்தில், தோல்வியடைந்து இவ்வுலகைவிட்டு மறைந்துவிட்டார். முதல்முறையாக அவர் சந்தித்த ஒரு தோல்வியென்றால், அது இதுவாகத்தான் இருக்கும். 1948–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24–ந் தேதி கர்நாடக மாநிலத்தில் ஜெயலலிதா பிறந்தார். செல்வச்செழிப்போடு பிறந்த ஜெயலலிதா, கைக்குழந்தையாக இருக்கும்போதே தந்தையை இழந்தார். அந்தப்பருவத்திலேயே ஏழ்மையை சந்தித்தார். அதன்பிறகு அவரது தாயார் சந்தியா, சினிமாவில் நடிக்கத்தொடங்கி அந்த வருமானத்தில் தான் வாழ்க்கை நடந்தது.
ஜெயலலிதா சிறுவயதில் பெங்களூருவில் உள்ள, பிஷப் காட்டன் பள்ளிக்கூடத்திலும் தொடர்ந்து சென்னை சர்ச்பார்க் கான்வென்டிலும் படித்தார். படிப்பில் படுசுட்டியாக விளங்கிய ஜெயலலிதா, தான் ஒரு பிரபல வக்கீலாக வேண்டும் என்ற குறிக்கோளோடு இருந்தார். ஆனால், காலம் வேறு கணக்குப்போட்டு விட்டது. பள்ளிப்படிப்பை முடித்தவுடன், ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் சேரவேண்டிய அவர், விருப்பமில்லாமலே, சினிமா வாழ்க்கையில் நுழைந்தார். எப்படி படிப்பில் ஜொலித்தாரோ அதுபோல, சினிமா வாழ்க்கையிலும் ஒளிமிகுந்த நட்சத்திரமாக ஜொலித்து, 120–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அதன்பிறகு அவர் நினைக்காமலேயே அரசியலில் நுழைய வேண்டிய நிலை அமைந்தது. 1982–ல் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். அந்தக்கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளராக தமிழகம் முழுவதும் வலம் வந்தார். 1984–ல் டெல்லி மேல்–சபை உறுப்பினரானார். அவருடைய ஆங்கிலப்பேச்சும், இந்தி மொழியிலிருந்த ஆற்றலும், இந்திராகாந்தி முதல் எல்லாத்தலைவர்களையும் கவர்ந்தது. 1987–ல் எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பிறகு, அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பையேற்று, அந்தக்கட்சியை கட்டிக்காத்தார். 1991, 2001, 2011, 2016–ல் நடந்த தேர்தல்களில் வெற்றிப்பெற்று முதல்–அமைச்சர் பொறுப்பை ஏற்றார். தான் நினைத்ததை சாதிக்கும் போராட்டக்குணமுடைய ஜெயலலிதா, மத்திய அரசாங்கத்திடம் பல்வேறு கோரிக்கைகளை வேண்டுகோளாக விடுத்து, நிறைவேறாவிட்டால் போராடி பெற்றுள்ளார். காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வைத்தது அவருடைய போராட்ட உணர்வுக்கு கிடைத்த வெற்றி தான். இவருடைய ஆட்சியில் பெண்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் எண்ணற்ற நன்மைகள் கிடைத்தன.
முதன்முறையாக ஆட்சிப்பொறுப்பை ஏற்ற நேரத்தில் 1992–ம் ஆண்டு ‘தினத்தந்தி’யில் வந்த ஒரு செய்தியைப் பார்த்து தான், ‘தொட்டில் குழந்தை’ திட்டத்தைக்கொண்டு வந்தார். ஏறத்தாழ 4,500–க்கும் மேற்பட்ட பெண்குழந்தைகள் இந்தத்திட்டத்தால் உயிர்ப்பிழைத்துள்ளனர். இந்த திட்டத்தை அன்னை தெரசாவே ஜெயலலிதாவின் வீட்டிற்கு வந்து மனதாரப் பாராட்டினார். தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் பேசும் ஆற்றல் கொண்ட ஜெயலலிதா அந்தந்த மாநிலத்தவர்களிடம் அவர்களது தாய்மொழியிலேயே பேசி எல்லோரையும் ஈர்த்தார். மனோதிடம், அன்பு, ஆற்றல், கருணை, துணிவு, மனஉறுதி போன்ற பல குணநலன்களுக்கு சொந்தக்காரரான ஜெயலலிதா ஒரு வெற்றித்திருமகளாகவே வாழ்ந்தார். முதல்–அமைச்சராக, நான்குமுறை பொறுப்பேற்று சாதனைகள் பல புரிந்த அவர் ஒரு சரித்திரமாகிவிட்டார். தமிழக அரசியலில் அவருடைய மறைவு நிச்சயமாக ஒரு வெற்றிடத்தை உருவாக்கிவிட்டது.
அ.தி.மு.க.வின் அரணாக இருந்து, எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பிறகு அந்தக்கட்சியை போற்றிப்பாதுகாத்து வந்தவர் ஜெயலலிதா. அவரது மறைவு அ.தி.மு.க.வுக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கே மிகப்பெரிய இழப்பாகும். ஒட்டுமொத்த தமிழகமே அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது. ‘வாழ்ந்தவர் கோடி மறைந்தவர்கோடி, மக்களின் மனதில் நிற்பவர் யார், மாபெரும் வீரர் மானம்காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்’ என்ற பாடல், மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த பாடலாகும். இதற்கு மிகவும் பொருத்தமானவர் ஜெயலலிதா. என்றென்றும் மக்களின் மனதிலும் நிற்பார்; சரித்திரம் தன்னிலும் நிற்பார்.
Courtesy: http://www.dailythanthi.com/Thalayangam
0 comments:
Post a Comment