Thursday, December 04, 2014

கன்னத்தில் மாணவன் அறைந்ததால் ஆசிரியையின் காது சவ்வு கிழிந்தது: ஏற்கெனவே ஒரு பெண் ஆசிரியரை தாக்கியுள்ளார்

சென்னை மதுரவாயல் சந்தை சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். இந்த பள்ளியில் புளியந்தோப்பு வ.உ.சி. நகரை சேர்ந்த லட்சுமி (37). என்பவர் கம்ப்யூட்டர் ஆசிரியராக பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் மாலையில் பிளஸ் 2 வகுப்பில் கம்ப்யூட்டர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவர் ஆசிரியர் சொல்லிக்கொடுத்ததுபோல செய்யா மல், கம்ப்யூட்டரை ஆப் செய்துவிட்டார்.
இதனால் ஆசிரியர் லட்சுமி அந்த மாணவரை கண்டித்தார். ஆத்திரம் அடைந்த மாணவன் ஆசிரியரின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டார். இதைப் பார்த்த மற்ற மாணவர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட் டனர்.
மாணவனின் செயலால் ஆசிரியர் லட்சுமி நிலை குலைந்துவிட்டார். ஆசிரியை தாக்கப்பட்ட தகவல் பள்ளி முழுவதும் பரவியது. அதைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும், ஆசிரியரை தாக்கிய மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து பள்ளியின் முன்பு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் ஆசிரியை லட்சுமி நேற்று காலையில் பள்ளிக்கு வந்து, காது வலிப்பதாக கூறி விடுமுறை எடுத்துக்கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், காது சவ்வு கிழிந்து இருப்பதாகவும், இதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து ஆசிரியை லட்சுமி மதுரவாயல் போலீஸில் புகார் கொடுத்தார். காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட கல்வித் துறை அதிகாரி சுவாமிநாதன் நேற்று காலையில் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அந்த மாணவன் கடந்த 6 மாதத்துக்கு முன்பும் ஒரு பெண் ஆசிரியையை தாக்கியிருக்கிறார். அப்போது ஒரு கவுன்சிலர் தலையிட்டு பிரச்சினையை முடித்துவைத்திருக்கிறார். அந்த சம்பவத்துக்காக மாணவனிடம் இருந்து மன்னிப்பு கடிதமும் வாங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் அதே தவறை அந்த மாணவன் செய்ய அவரை பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment