சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக, 1979-ம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அனில் குமார் சின்ஹா (58) நேற்று பொறுப்பேற்றார்.
2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்குகளை கையாள்வது தொடர்பாக சிபிஐ அமைப்பை நீதிமன்றங்கள் வெகுவாக குறை கூறி வரும் நிலையில் இதன் தலைமைப் பதவியில் அமர்ந் துள்ளார் அனில் குமார் சின்ஹா.
சிபிஐ அமைப்பின் சிறப்பு இயக்குநராக 21 மாதம் அனுபவம் வாய்ந்த சின்ஹா சாரதா சிட் பண்ட் ஊழல் விசாரணையை மேற் பார்வையிட்டவர். கூண்டுக் கிளியாக சிபிஐ சிறைபட்டுக் கிடப்பதாக உச்ச நீதிமன்றம் விம்ர்சித்துள்ள நிலையில் அதன் நம்பகத்தன்மையை மீண்டும் கொண்டு வரும் உன்னத கடமை அனில் குமார் சின்ஹாவுக்கு உள்ளது.
இவருக்கு முன் சிபிஐ இயக்குநர்களாக பதவி வகித்த ரஞ்சித் சின்ஹா, ஏ.பி.சிங் ஆகியோர் பிஹாரை சேர்ந்தவர்கள். இவரும் பிஹாரைச் சேர்ந்தவர்தான்.
ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் புகழ்பெற்ற அரசு கென்னடி பள்ளியில் படித்தவர் இவர். “சிறியதோ, பெரியதோ… சவால்கள் என்று எதுவும் இல்லை. நல்லது செய்வதற்கான வாய்ப்புகள்தான் அனைத்து சவால்களுமே” என்று நிருபர்களிடம் தமது முன்னுரிமை பணி பற்றி விவரித்தார் அனில் குமார் சின்ஹா.
“சிபிஐ முன் உள்ள சவால்களை நான் அறிவேன். நீதியை நிலைநாட்டவும் இந்த அமைப்பின் லட்சியத்தை நிறை வேற்றவும் எனது சகாக்களுடன் இணைந்து பணியாற்றுவேன்” என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
சிபிஐ புதிய தலைவரை தேர்ந்தெடுக்க பிரதமர் நரேந்திர மோடி, தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் நடத்திய ஆலோசனையில் சின்ஹாவின் பெயர் ஒப்புக்கொள்ளப்பட்டது.
உளவியல் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர் அனில் குமார் சின்ஹா. ஐபிஎஸ் பணியில் 1979-ம் ஆண்டு சேர்ந்தார். அதற்கு அடுத்த 18 ஆண்டுகள் பிஹாரில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 2013 மே மாத்தில் சிபிஐ சிறப்பு இயக்குநராக பதவியேற்றார்.
0 comments:
Post a Comment